கடைசி நாட்கள் / பக்கம் – 01

   வயதானதால் நோய் வந்ததா இல்லை நோய் வந்ததால் சீக்கிரம் வயதாகி விட்டதா என தெரியவில்லை. யாரிடமும் கலங்காத உன் கண்கள் என்னிடம் மட்டும் கலங்கிருக்கிறது. குறைந்த அளவு மட்டுமே நீ என்னுடன் நேரத்தை செலவிட்டாய். ஆனால் அதுவே எனக்கு நிறைவாக இருந்தது. நான் இந்த வீட்டிற்கு வந்த நொடி முதல் உன்னை கடைசியாக பார்த்த நொடி வரை எல்லாவற்றையும் எனக்குள் நினைவாக பதித்திருக்கின்றேன். எனக்காக ஒரே ஒரு முறை எழுந்து வா நான் உனக்கு எல்லாவற்றையும் காண்பிக்கிறேன். அப்பொழுது உன் முகத்தில் தெரியும் புன்னகையை நான் எனக்குள் பதித்துக்கொள்கிறேன் என்றது முகக்கண்ணாடி.

 மூட்டு வலி சரியானதும் மீண்டும் என்னை வெளியே அழைத்துச் செல்வாய் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். பல ஆண்டுகள் கடந்து விட்டது. உனக்கு பிறகு யாரும் என்னை பெரிதாக பார்த்ததில்லை. உன் சுறுசுறுப்புக்கு ஏற்ப நானும் செயலிட்டேன். ஆனால் இப்பொழுது  செயலின்றி தவிக்கிறேன். அதனால் நான் விட்ட கண்ணீர் கூட என் மீது போத்திருக்கும் துணி மறைத்து விட்டது. உன்னுடன் வெளியே செல்ல ஆசையாக இருக்கிறது எனக்காக ஒரே ஒரு முறை  எழுந்து வந்து என்னை வெளியே அழைத்து செல்கிறாயா என ஏக்கத்துடன் கேட்டது மிதிவண்டி.

திருமண பரிசாக நான் உன் வீட்டிற்குள் வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை என்னிடத்தில் வேறு யாரையும் மாற்றாமல் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கிறாய்.  நீ காசுக்காக ஓடிய போது உன்னுடன் போட்டி போட்டு நானும் ஓடி உன்னை பலமுறை தோற்கடித்தேன். ஆனால் இப்பொழுது உன்னுடன் போட்டியிட மனம் இல்லாமல் உன் அருகிலேயே படுத்துக்கொண்டேன் என்றது சுவர் கடிகாரம்.

 நான் உன்னை சுமந்ததாக தான் எல்லோரும் பார்த்தார்கள். நீ என்னை பார்த்துக்கொண்டது யாருக்கும் தெரியாது. நான் ஒரு நாளும் பசியால் வாடியது இல்லை சூரிய வெப்பத்தில் வெந்ததில்லை. ஒரு போதும் நீ என்னை காயப்படுத்தியதில்லை என்னுடன் பேசிப் பயணித்த உன்னுடன் மீண்டும் பயணிக்க காத்திருக்கிறேன். எனக்காக ஒரே ஒரு முறை எழுந்து வா நாம் எப்பொழுதும் போகும் மைதானத்திற்கு சென்று காற்று வாங்கலாம் என அழைக்கிறது இரு சக்கர வாகனம்.  நான் உனக்கென இந்த வீட்டிற்குள் வந்த பிறகு எனக்கு பல மடங்கு மரியாதை கிடைத்தது. வீட்டிற்குள் நீ வந்த நொடியே என்னை தான் தேடுவாய் இரவில் உனக்கு தூக்கம் கலையும் நேரமெல்லாம் நீயும் நானும் வெளியே ஒன்றாக அமர்ந்து இரவைக் கழிப்போம். ஆனால் இப்பொழுது நான் வெளியே சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்காக ஒரே ஒரு முறை எழுந்து வா நாம் இருவரும் வெளியே சென்று காற்றாட அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசுவோம் என அழைக்கிறது நாற்காலி.

பக்கம் எண் – 1 2 3