கடைசி நாட்கள் / பக்கம் – 02

 பசிக்கிறது என சொல்லிய போது உன் கண்களில் இருந்த உண்மை போதும் வயிறு நிறைந்து விட்டது என சொல்லியபோது இல்லை. காலை சாப்பாட்டின் போது நீ அமர்ந்து நான் பார்த்ததில்லை. மதியம் சாப்பாட்டின் போது நீ வீட்டிலிருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இரவு சரியாக சாப்பாட்டின் நேரத்தில் உன்னை ஒருநாளும் நான் பார்த்ததில்லை. நீ அமைதியாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிட உனக்கு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்காக ஒரே ஒரு முறை எழுந்து வா நீ வயிறார சாப்பிட்டு உண்மையில் பசி தீர்ந்த உன் கண்களை நான் பார்க்க வேண்டும் என்றது தட்டு.

 உன் கைகளில் பழைய வலு இல்லை. நடுக்கத்துடன் நீ என்னை தூக்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. உன் பிள்ளைகளிடம் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்காதீர்கள் என சொல்லிவிட்டு வெறும் தண்ணீரை மட்டும் குடித்து பசியாற்றிக் கொண்ட உன்னை நான் பழைய கம்பீரத்துடன் பார்க்க நினைக்கிறேன். உன் கைகளில் நடுக்கம் இல்லாமல் நீ என்னை எப்பொழுது தூக்குவாய் என பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் உன் கைகள் என் மீது பட்டே நாட்கள் ஆகிவிட்டது எனக்காக ஒரே ஒரு முறை எழுந்து வந்து என்னை தூக்கு என்கிறது டம்ளர்.

 எப்பொழுதும் என்னை தேடும் உன் கண்களைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. என் மேல் சின்னதாக ஒரு தூசி படிந்தாலும் உடனே அகற்றி எப்பொழுதும் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாய். ஆனால் இப்பொழுது நான் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு என் மீது தூசி படிந்து கிடக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னோடு தான் பயணித்தேன். எனக்கு உன்னை தவிர வேறு யாரையும் தெரியாது எனக்காக எழுந்து வந்து என்னை உன் கையில் அணைத்துக்கொள் என்றது கை கடிகாரம்.

 என்னுடன் இருக்கும் எல்லோரையும் விட நான் பெரிதாக பார்க்கப்பட்டேன். காரணம் நான் உன்னுடையதாக இருந்தது மட்டும்தான். எனக்கென ஒரு இடம், என்னை துடைக்க ஒரு துணி என தனி மரியாதையுடன் நீ என்னை பார்த்துக்  கொண்டதில் என் மீது போடப்பட்டிருந்த தையல்களின் வலியை நான் மறந்திருந்தேன். அது எல்லாம் உன் பாதம் பட்ட நாட்கள் வரையில் மட்டும் தான். இப்பொழுது வீட்டிற்கு வெளியே நிற்கும் உன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு கீழே நான் தஞ்சம் அடைந்து பல நாட்கள் ஆகிவிட்டது. என் உடம்பில் தையல் போட்டிருந்த இடமெல்லாம் ஒட்டடை படிந்து உடம்பு முழுவதும் எரிகிறது எனக்காக எழுந்து வா உன் வருகையை அறிந்தாலே என் மீது படிந்திருப்பதெல்லாம் பறந்து போகும் என்றது காலணி.  தூக்கி எறியப்பட்ட காய்ந்த பூக்களிடம்  உன் நலத்தைப் பற்றி தினமும் கேட்டறிந்து கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் பூக்களை வீட்டிற்குள் அனுப்புகிறோம் நீ உடல் நலத்தோடு ஆரோக்கியமாக எழுந்து வருவாய் என்ற செய்தியை கேட்பதற்காக. ஆனால் ஒவ்வொரு முறையும் வரும் செய்தி எங்கள் மனதை உருகடுக்கிறது. எங்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்த உனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என வேண்டுவதற்காக இங்கிருந்து கோவிலுக்கு செல்லும் பூக்கள் இறைவனிடம் தினமும் உன் உடம்பு சரியாகி விட வேண்டும் என வேண்டிக் கொள்கிறது.  நம்பிக்கையோடு இரு நாங்கள் இருக்கிறோம் என கண்ணீரோடு சொல்கிறது தோட்டத்துச் செடிகள்.

பக்கம் எண் – 1 2 3