கடைசி நாட்கள் / பக்கம் – 03

 இந்த வீட்டில் ஒலிக்கப்பட்ட பல நினைவு கதைகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். உன் பிள்ளைக்கு காது குத்தும் போது அந்த தொலை  அவனுக்கு வலிக்கும் என அவன் தாய் மாமா மடியில் இருந்து தூக்கிக் கொண்டு ஓடியது உன் பிள்ளை மீது உனக்கு இருந்த பாசத்தை பிரதிபலித்தது. அதே பாசத்தை நீ என்னிடமும் காட்டினாய். என் மீது யாரையும் தொலை போட விடாமல் பார்த்துக் கொண்டாய் எனக்கு வலிக்கும் என நீ யோசித்தது எனக்கு சொல்ல முடியாத சந்தோஷத்தை தந்தது. ஆனால் இப்பொழுது உன் உடம்பில் ஊசி என்ற பெயரில் தொலை போடுவதைப் பார்க்க முடியாமல் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருக்கிறேன். எனக்காக எழுந்து வந்து என் மீது சாய்ந்துக்கொள் நான் உனக்கு வலி தெரியாமல் அணைத்துக்கொள்கிறேன் என்றது வீட்டின் சுவர்.

 எங்களை எங்கு பார்த்தாலும் அடித்துக் கொன்று விடுவார்கள். அல்லது கொள்வதற்காக ஆங்காங்கே மருந்து வைப்பார்கள். ஆனால் நீ மட்டும் தான் எங்களையும் ஒரு உயிராக பார்த்து உன் பிள்ளைகளிடம் அவர்களை கொல்லக்கூடாது. அவர்கள் நமக்கு முன்பில் இருந்தே இங்கு வாழ்ந்து வருகிறார்கள். நம் பயத்தினால் அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது. நம்மை அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என எங்களுக்காக யோசித்த உன்னோடு மட்டுமே நாங்கள் நாட்களை கடக்க நினைக்கிறோம் எங்களுக்காக எழுந்து வா என ஏக்கத்துடன் கூப்பிட்டது பல்லிகளும், எட்டுக்கால் பூச்சிகளும்.

 நீ அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அலாரம் என்ற பெயரில் சத்தம் போட்டு எழுப்பி விடும் உன் கைபேசி இடம் நான் பலமுறை சண்டை போட்டு இருக்கிறேன். தூக்கத்தில் வரும் உன்னுடைய குரட்டை சத்தம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உன் உடம்பு வலியும், மனம் புலம்பல் சத்தமும் எனக்கு மட்டும் தான் தெரியும் அதனால் தான் நாங்கள் உன்னை எழுப்ப மனம் இல்லாமல் உன் கைபேசியிடம் சண்டை போடுவோம். ஆனால் இப்பொழுது நீ படுத்த படுக்கையாக மாறி பல நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நிலை உனக்கு வரும் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை என சோகத்துடன் சொல்லியது பாயும், தலையணையும்.

 உன் விரல்களுக்கு இடையே நான் இருக்கும் போதெல்லாம் நான் பிறந்த பலனை அடைந்து கொண்டிருக்கிறேன் என்ற சந்தோஷம் எனக்கு எப்பொழுதும் இருக்கும். உன் இதயத்துடிப்பை கேட்டு வாழ்ந்த எனக்கு நீ கொடுத்த முக்கியத்துவத்தை வேறு யாரால் கொடுக்க முடியும். எனக்காக எழுந்து வா நீ கடைசியாக எழுதி மூடி வைத்த டைரிக்கு நடுவே தான் காத்திருக்கிறேன் என்றது பேனா.

 பல நாட்களாக படுத்த படுக்கையாக இருந்த நபர் எழுந்து நின்று வீட்டை சுற்றிப் பார்க்கிறார். பொறுமையாக அடி எடுத்து வைத்து வீட்டின் முன்புறம் இருக்கும் கதவை தாண்டி நிற்கிறார். அவர் வந்து விட வேண்டும் என ஏக்கத்துடன் இருந்த பொருட்கள் எல்லாம் அவரை மனம் மகிழ்ந்து பார்க்கிறார்கள். அந்த நொடி வீட்டிலிருந்து ஒரு அலறல் சத்தம் ஒலிக்கிறது. ஆம் அந்த உடம்பை விட்டு உயிர் பிரிந்து விட்டது.

பக்கம் எண் – 1 2 3

நன்றி

மீண்டும் இணைவோம்

கதை எழுத்து, பாலமுருகன் மணிகண்டன்