சிறு குறு வியாபாரிகள் / பக்கம் – 02

 ராசு கடையிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம்  பலவித கனவுகளோடு பயணிக்கிறார். அடகு வைத்த நகையை மீட்டுவிடலாம் மனைவி கைப்பேசிக்கு இரண்டு மாதமாக ரீசார்ஜ் செய்யாமல் இருப்பதை இந்த மாதம் ரீசார்ஜ் செய்துவிடலாம். நினைத்த மல்லிகை சாமான்களை வாங்கி சமைத்து சாப்பிடலாம் நம் வீட்டு சமையலறையிலும் மனம் வீசப் போகிறது என்ற சந்தோசத்துடன் வீட்டிற்கு வந்து மிதிவண்டியை நிறுத்திவிட்டு பையை எடுத்துக்கொண்டு மகிழ்ந்த முகத்துடன் வீட்டிற்குள் செல்கிறார்.

 மனைவி மடியில் மகள் தலைவைத்து படுத்திருக்கிறாள். மனைவி மகளுக்கு நெற்றியில் வெந்நீரில் ஒத்தரம்  கொடுத்து கொண்டு இருந்ததை பார்த்து பக்கத்தில் ஓடி வந்து என்னம்மா ஆச்சு என மகள் கன்னத்தில் கை வைத்து தொட்டுப் பார்க்கிறார். உடம்பில் லேசாக சுரம் அடித்தது காலையிலிருந்து விட்டு விட்டு சுரம் அடிக்கிறது இப்ப கஞ்சி குடிச்சிட்டு மாத்திரை போட்டிருக்கா என மனைவி சொல்கிறார். மகளைத் தூக்கி கொஞ்சியபடி  மடியில் அமர வைத்து போர்வையை போர்த்திவிட்டு பாப்பாவுக்கு உடம்பு என்ன பண்ணுது என கேட்டான். தெரியலப்பா ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறாள். மகளை அணைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பையில் இருந்து ஒரு விளையாட்டு பொம்மையை எடுத்து மகளிடம் காண்பித்தார். பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த பொம்மையை பார்த்த சந்தோஷத்தில் போர்வையை தள்ளிவிட்டு பொம்மையை கையில் வாங்கி அணைத்துக் கொண்டால். ராசு குடும்பத்தோடு சின்ன சின்ன ஆசைகளையும் கனவுகளையும் பூட்டி வைத்திருந்த கதவின் வழியாக வந்த விளையாட்டு பொம்மையை தொடர்ந்து ஒரு உணவு பையும் வந்தது. அதை மனைவி பிரித்துப் பார்க்கிறாள். அதில் ஃபேமிலி தோசை என சொல்லக்கூடிய பெரிய தோசை இருந்தது. ஹோட்டல் உணவு பலரின் பசியையும், ருசியையும் தீர்த்திருந்தாலும் சிலருக்கு அங்கு இருக்கும் ஒரு சில உணவை ருசி பார்ப்பதே ஒரு கனவாக இருக்கும் அந்த வரிசையில் தான் ஃபேமிலி தோசை ராசுவின் குடும்பத்திற்கு ஒரு கனவாக இருந்தது.

 சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் ராசுவின் குடும்பம் மகிழ்ச்சியாக தோசையை பிரித்து சாம்பார் மற்றும் சட்னி பொட்டலத்தை பிரித்து ஊத்தி தோசையை பிய்த்து சாம்பார் சட்னியில் பிரட்டி மகளுக்கு ஊட்டி விட்டார் கண்களால் ஆசை ருசி பார்த்த உணவின் உண்மையான சுவையை சாப்பிட்ட சந்தோஷத்தில் அப்பா செமையா இருக்குப்பா என சொல்கிறாள். மனைவியும் ராசுவும் சிரித்தபடியே மகள் ரசித்து சாப்பிடும் அழகை பார்க்கிறார்கள். ராசு மனைவிக்கு தோசையை ஊட்டி விட்டார். ஆனந்தத்தில் மனைவியின் கண்ணில் லேசான ஈரத்துடன் உதட்டில் புன்னகையோடு அசை போட்டு தோசையை சாப்பிட்டார். கணவனுக்கு ஊட்டி விடுவதற்காக தோசையை கையில் எடுத்து ராசு வாய்க்கு அருகில் கொண்டு போகும் போது மகள் ராசுவின் நெஞ்சில் வலு கொடுத்து காலை நீட்டி அம்மா கையை  எத்தி தள்ளிவிட்டாள். ராசுவும் மனைவியும் மகளைப் பார்க்கிறார்கள். கண்கள் இரண்டும் மேலே சொருகி பேச்சு மூச்சு இல்லாமல் கை, கால் விரைத்து போனதை போல மயக்க நிலைக்கு சென்றாள். ராசுவும் மனைவியும் ஒன்றும் புரியாமல் பாப்பா… பாப்பா… என அலறுகிறார்கள். குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் விளக்கெல்லாம் அணைந்திருந்தது. இவர்கள் ஓடி வந்ததை பார்த்து அங்கு இருந்த ஒரு பெண் வந்து குழந்தையை பார்த்துவிட்டு ராசுவிடம் தம்பி இப்போதைக்கு இங்க மருத்துவர்கள் யாரும் வர மாட்டாங்கப்பா காலையில தான் வருவாங்க நீ பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு போய் பாருப்பா என சொல்லியதை கேட்டு தனியார் மருத்துவமனைக்கு ஓட தொடங்கினார்கள். கண்களில் கலங்கிய கண்ணீர் பாதையை மறைக்கிறது அதை உதறிவிட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தார்கள். குழந்தையை பார்த்த மருத்துவர் நாடித்துடிப்பை பார்த்துவிட்டு உடனே எமர்ஜென்சி வார்டுக்கு தூக்கி செல்லுங்க என்றார். ராசுவிடம் என்ன நடந்தது என கேட்டுவிட்டு மருத்துவர் எமர்ஜென்சி வார்டுக்கு சென்றார் ராசுவும் மனைவியும் அழுதபடியே மகள் இருக்கும் அறையின்   கதவை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

பக்கம் எண் > 1 2 3 4