சிறு குறு வியாபாரிகள் / பக்கம் – 04

 மருந்தகர் ராசுவிடம் உங்க கிட்ட இருக்க பணத்திற்கும் நாங்க குறைத்த பணத்திற்கும் சேர்த்து சுரம் அடித்தால் எடுத்துக் கொள்ளும் மருந்துடன் ஒரு வாரத்திற்கு மட்டுமே மருந்து மாத்திரை வரும் அதற்கே இன்னும் 18 ரூபாய் வேண்டும் என்றார். ராசு மீண்டும் சட்டை பையிலும், உள் பையிலும், இடுப்பிலும் தேடிப் பார்த்தார். இடுப்பில் தடிசாக ஒன்று தென்பட்டது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது மூன்று நாள் திருவிழா தொடக்கத்தில் முதல் விற்பனை போது ஒரு முழம் பூ முப்பது ரூபாய் என நான் சொல்லியதற்கு என்னிடம் பேரம் பேசி 20 ரூபாய்க்கு வாங்கி சென்றார். அந்த 20 ரூபாயை கோவில் உண்டியலில் போடுவதற்காக தனியாக எடுத்து வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அதை எடுத்து காகித தாளை பிரித்து இருவது ரூபாயை கொடுத்தார் மருந்தகர் மீதி இரண்டு ரூபாய் கொடுத்தார். அந்த இரண்டு ரூபாயை பார்த்து இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மருந்து மாத்திரையை வாங்கிவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டு மனைவியை அழைத்து வீட்டிற்கு சென்றார்.

 இரவு மகளை தூங்க வைத்து விட்டு ராசுவும், மனைவியும் படுக்கிறார்கள் மனைவி கேட்கிறார் கடையில் வியாபாரம் நீங்க எதிர்பார்த்த மாதிரி நடந்துச்சா மருத்துவமனையில் எவ்வளவு செலவாச்சு என கேட்டார். இரண்டிற்கும் ஒரு பதிலாக கையில் இருந்த இரண்டு ரூபாயை மனைவியிடம் காண்பித்தார் மனைவிக்கும் புரிந்து விட்டது.

 பணம் இல்லாத வறுமைக்கான கண்ணீர் தீர்ந்து விட்டதால் அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

 மறுநாள் காலை ராசு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் வழியில் ஹோட்டலை பார்க்கிறார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது மூன்று வாய் மட்டுமே எடுத்த தோசையில் வீட்டில் இருந்த எறும்பும், பூச்சியும் மீதி உணவை சாப்பிட சூழ்ந்திருந்தது ராசுவின் கண் முன் வந்து சென்றது.

 நகை அடகு கடையை பார்க்கிறார் விடை தெரியாத கேள்விகள் நிறைந்து இருக்கும் வரிசையில் அடகு வைத்த நகையை எப்பொழுது மீட்க போகிறோம் என்ற கேள்வியும் இணைந்து விட்டது.

 பொம்மை கடையை பார்க்கிறான் மகள் ஆசையாக கேட்ட பொம்மையுடன் முழுமையாக ஒரு மணி நேரம் கூட விளையாடவில்லை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பொம்மை சாம்பாரில் கிடந்தது அதை எடுத்து வைத்து பொம்மை அழுக்காயிடுச்சு என மகள் அழுதது நினைவுக்கு வந்தது.

 மிதிவண்டியை கோவில் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அங்கு நிரம்பிய கோவில் உண்டியலில் இருந்து எடுத்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்கள். பார்த்து முடிக்கவே பல நேரம் ஆகும் அளவிற்கு சில்லறைகள், பணங்கள், தங்க காசுகள், வெள்ளிகள் என பலவற்றால் நிறைந்திருந்த இடத்தை பார்க்கிறார். வாங்கின பணத்தை வட்டியோட திரும்ப எப்ப தருவோம் என்று தெரியாமல் நம்மை நம்பி பணம் கொடுப்பதற்கு நம்ம என்ன கடவுளாங்க என மனைவி கேட்டது மீண்டும் காதில் ஒலித்தது.

 ராசு சட்டை பையில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்து கோவில் உண்டியலில் போட்டுவிட்டு எதுவும் பேசாமல் சாமியை பார்த்தபடியே நிற்கிறான்.

பக்கம் எண் > 1 2 3 4

நன்றி, மீண்டும் இணைவோம்

கதை எழுத்து பாலமுருகன் மணிகண்டன்